Sunday, April 28, 2019

பருத்தி விவசாயம்

—————————
கடந்த 25-04-2019 விளாத்திகுளம் சென்றபோது பேருந்து நிலையம் ஆட்டோவில் பருத்தியை நிரப்பிக் கொண்டுவந்து பருத்தி வியாபாரிகள் இறக்கினார்கள்.

ஒரு காலத்தில் பருத்தி காட்டில் பருத்தியை எடுக்கும் வேலையாட்களுக்கு சம்பளப் பணம் தராமல் அதற்குப் பதிலாக பருத்தியை கூறு போட்டு ஓரு பகுதியை அவர்களுக்கு கொடுப்பார்கள். வானம் பார்த்த கந்தக பூமியில் பருத்தியும், மிளகாயும் அதிகம் விளையும். அதை அறையில் பக்குவப்படுத்தி பாதுகாத்து வைத்து நல்ல விலை வரும்போது சங்கரன்கோவில், கோவில்பட்டி, விருதுநகர் கமிசன் வியாபாரிகளுக்கு விவசாயிகள் விற்பதுண்டு. வட்டவடிவில் தாட்டுகள் என ஒருங்கிணைந்த சாக்குகளாக கட்டி பருத்திகளை மாட்டு வண்டியிலோ, லாரியிலோ பாரம் ஏற்றி அனுப்புவதுண்டு.

நேற்று விளாத்திகுளத்தில் பார்த்தபோது அந்த பருத்தியை ஷேர் ஆட்டோவில் வந்து தள்ளியபோது இந்த வட்டாரத்தில் விளைச்சலும் இல்லை, வெள்ளாமை இல்லை என்ற கவலையான காட்சி தெரிந்தது. சங்கரன்கோவில், கோவில்பட்டி, சாத்தூர், ஒட்டப்பிடாரத்தில் உற்பத்தியாகிற பருத்தியை பிரிட்டிஷார் ஆட்சிக்காலத்தில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து பிரிட்டன் லங்காசசையர், மான்செஸ்டர் போன்ற இடங்களுக்கு எல்லாம் கொண்டு சென்றதுண்டு. இந்த பருத்தி ஏற்றுமதிக்காகவே தூத்துக்குடியில் கிரேட் காட்டன் சாலை என்று அப்போது அமைத்தார்கள்.
இதே போல சென்னை சைதாப்பேட்டையிலும் பருத்தி விதைகள் போட்டு நடவு செய்து முயற்சி செய்த போது அது பொய்த்துவிட்டது. பஞ்சாபில் ஹிப்பாலிலும், டெல்லியிலுள்ள பூசாவிலும் முயற்சி செய்தபோது சரியாக வரவில்லை. எங்கேயும் அவர்களுக்கு சிறப்பான விளைச்சல் கிடைக்கவில்லை. அதனால் கோவில்பட்டியை ஆங்கிலேயரின் காட்டன்பட்டி என்றும் அழைத்துதுண்டு. இதற்காக கோவில்பட்டி விவசாயப் பண்னையை பருத்தி, மிளகாய், மானாவாரி தானியப் பயிர்களுக்கான ஆராய்ச்சி நிலையம் நிறுவி 119 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த கரிசல் மண் பகுதியில் 1960லிருந்து நினைவு. இந்த பருத்தி நாட்டுப் பருத்தி என்றும், லட்சுமி காட்டன் என்றும், இன்றைக்கு பி.டி.காட்டன் வரை பல வகையான பருத்தி பயிர்கள் வந்துவிட்டன. 
அப்படி விளைந்த பருத்தியும், மிளகாயும், எண்ணெய் வித்துக்களும் அந்த காலத்தில் லாரியில் வழிந்து சென்றது. இன்றைக்கு ஆட்டோவில் எடுத்து வரும் சூழலை பார்க்கும்போது, படிப்படியாக விவசாயம் அழிந்து வருகிறதோ என்ற ரணங்கள் தான் நெஞ்சில் எழுகின்றன.
Image may contain: 3 people, outdoor

விவசாயிகள் மத்தியல் 100 குவிண்டால், 200 குவிண்டால் என்று பேசிக் கொண்டு வந்த பருத்தி தற்போது 100 கிலோ, 200 கிலோ என்ற அளவிலேயே பேசுவது சற்று வருத்தத்தை தருகிறது.
Image may contain: outdoor and nature
1994 ஆம் ஆண்டில் பருத்தி உற்பத்தியில் ஏற்பட்ட அமோக விளைச்சல் காரணமாக போதுமான ஆதார விலை கிடைக்கவில்லை. அது தொடர்பாக கோவில்பட்டி புது ரோட்டில் அரசு மருத்துவமனை எதிரில் எனது தலைமையில் விவசாயகளின் போராட்டம் நடைபெற்றது. அப்போது பருத்தியை சாலை முழுவதும் கொட்டி எதிர்ப்பைத் தெரிவித்தோம்.
Image may contain: sky, outdoor and nature
என்ன செய்வது? உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்று கிராமங்களும் மாறுகின்றன, விவசாயமும் மாறுகின்றன. எந்த திசையை நோக்கி செல்கின்றது என தெரியவில்லை.
பூர்விகமான, மரபு ரீதியான விவசாயம் அழிந்து கொண்டு வருகிறது என்பதை கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்படவில்லை என்றால் பெரும் இழப்பீடுகளுக்கு ஆளாவோம் என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும்.
#பருத்திவிவசாயம்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
26-04-2019

No comments:

Post a Comment