#கிரா_மணிவிழா_நினைவுகள் .
(21 அக்டோபர் 1984) .
இடம் – மதுரை காலேஜ் ஹவுஸ் மண்டபம் .
———————————————————-
பங்கேற்ற நினைவுகள்…..
நிகழ்வு – எழுத்தாளர் கி ரா மணிவிழா .
காலையில் கிராவின் படைப்பிலக்கியம் குறித்த கருத்தரங்கம் .
மாலையில் மணிவிழாக் கண்ட தம்பதியருக்குப் பாராட்டு விழா .
விழா ஒருங்கிணைப்பு – கவிஞர் மீரா .
கருத்தரங்கம்: காலை 10.00 மணி.தலைமை கோ . சங்கரராஜீலு .
கருத்தரங்கில் பங்களித்தவர்கள் –
கோ . கேசவன் ( ’ கதவு ‘ இரண்டாம் பதிப்பில் ‘ தோழர் ரங்கசாமி ‘ கதை நீக்கப்பட்டது குறித்து வருத்தம் தெரிவித்தார் )
பேராசிரியர் தோதாத்ரி (இயற்கையுடனான மனிதனின் போராட்டம் என்பதே யதார்த்தம் . அது கி . ரா . கதைகளில் காணக் கிடைக்கிறது )
பேராசிரியர் சி . கனகசபாபதி (கி . ராவின் படைப்புகளை உரலில் போட்டு இஸம் என்ற உலக்கையால் இடிக்க வேண்டாம் )
அ . மார்க்ஸ் (இன்னும் மனிதாபமுள்ள எழுத்தாளராக , மக்களிடமிருந்து விலகிப் போகாதவராக இருப்பதாலேயே கி . ராவை உரிமையோடு விமர்சிக்கிறேன் )
கவிஞர் இந்திரன் ( கி . ரா . மனிதன் எப்படியிருக்கிறானோ அப்படியே படைக்கிறார் )
த . ராஜாராம் ( கி . ரா . எதையும் கூவிச் சொல்வதில்லை ; பிரச்சாரம் செய்வதில்லை . அழுத்தமாகச் சொல்வார் )
டாக்டர் தி . சு நடராஜன் ( கோபல்லகிராமம் பல்வேறு வகை இலக்கிய உத்திகள் கொண்டது )
கவிஞர் கெளரிஷங்கர் (இது வயது விழா இல்லை ; சாதனை விழா ) தலைவர் தன் முடிவுரையில் “ தத்துவச் சுமைகளை இளம் படைப்பாளிகள் மீது வைக்காதீர் . கலைநுட்பத்தோடு எழுதப்படுவதைப் பாராட்டுங்கள் ” என்றார் .
பிற்பகல் 2 . 25 மணிக்கு கி . ரா . நிதானமாக எழுந்து தாம் விமரிசனங்களால் அதிகம் பாதிக்கப்படாததைக் கூறி , சந்தோஷமாகவே அனைத்தையும் பார்ப்பதாகச் சொல்லி அமர்ந்தார் .
இடையில் ஒரு சுவையான நிகழ்ச்சி . “ உசிலம்பட்டி விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவன் “ என்ற அறிமுகத்துடன் திடீரென்று மேடையேறிய பெரியவர் ஒருவர் “ விவசாயிகள் பற்றி எழுதுகிற இந்த விவசாயிக்கு விவசாயிகள் சார்பில் இதை அணிவிக்கிறேன் “ என்று கூறிவிட்டு ஓர் அழகான ரோஜா மாலையை கி . ரா வுக்கு அணிவித்தார் . தம்பதியருள் ஒருவருக்கு மட்டும் மாலையிட்டால் எப்படி …. ….
அருகில் இருந்தவர்களின் சைகையைக் கணத்தில் புரிந்து கொண்ட கி . ரா . தன் கழுத்திலிருந்த மாலையைக் கழற்றி தம் துணைவியாருக்கு அணிவித்துவிட்டார் .
மாலையில் கி . ரா வுக்கு பாராட்டு விழா . தலைமை – கவிஞர் சிற்பி . கிராமியக் கலைஞர் குணசேகரன் இசையுடன் விழா தொடக்கம் . சிற்பி தன் தலைமையுரையில் “ தகழி சிவசங்கரன் பிள்ளை , வைக்கம் முகமது பஷீர் என்று ஊரோடு சேர்த்து வழங்குவது போல இடைசெவல் கி . ரா . என்று பாராட்ட வேண்டும் “ என்றார் .
மணிவிழா வேண்டாம் என்று முதலில் மறுத்த கி . ரா . தன் மணிவிழா நினைவாக தமிழுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று கூறி இளைய கரிசல் எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளை அவரே தொகுத்து “ கரிசல் கதைகள் “ என்ற பெயரில் அன்னம் வெளியீடாக விழாவில் வெளியிட வைத்தார் . முதல் பிரதியை வெளியிட இருந்த அமைச்சர் காளிமுத்து வர இயலாது போனதால் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் வண்ணதாசன் . ( நான் தீரவாசத்துக்காரன் ; எனக்கு கரிசல் பருத்திக் காட்டில் என்ன வேலை என்று நினைத்து விடாதீர்கள் . பருத்திக்காட்டில் ஒரு பட்டாம்பூச்சி மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்கள் . கி . ரா . எனக்கு மாமா )பிரதியை பெற்றுக் கொண்டவர் ந . மணிமொழியன் . மணிமொழியன் பாராட்டுரையைத் தொடங்கி வைக்க தொடர்ந்து பாராட்டுரை வழங்கியவர்கள்.
ஜனதாகட்சி பழ . கருப்பையா (திரும்பத் திரும்ப படிக்கத் தூண்டுகிற கதைகளை எழுதியவர் கி . ரா )
முகவை மாவட் சிபிஎம் செயலாளர் எஸ் . ஏ . பெருமாள் (இலக்கியவாதிகள் தீர்வு சொல்லிவிட்டால் என்னைப் போன்ற அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை ?
ஆ .ரத்தினம் ( இடைசெவல்காரரின் உள்ளம் சிவப்பு )இவர் நெடுமாறனின்
காங்கிரஸ் சகா, காலேஜ் ஹவுஸ் பேக்கரி உரிமையாளர்.
தனுஷ்கோடி ராமமூர்த்தி (நீண்ட காலம் முன்பு இடைசெவலில் ஓர் ஆலமரத்தடியில் மிக எளிமையான தோற்றத்தில் பார்த்த ஆசான் கி . ரா . நிறமும் மணமும் குணமும் மாறவேயில்லை )
வீர . வேலுசாமி (கி .ரா வைப் பின்பற்றும் எந்த எழுத்தாளரும் சமூகப் பிரக்ஞையுள்ள நிலையில் இருந்து மாறவில்லை என்பதே அவரை எடை போட உதவும் )
ரசிக மணி பேரர்,தீப . நடராஜன் ( கி . ரா . அதிகமான கடிதங்கள் எழுதியது எனக்குதான் )
இரவு 9 மணிக்கு பேச வந்த கவிஞர் கந்தர்வன் செறிவான உரை நிகழ்த்தினார் . ( ‘ பூவை ‘ கதையின் முடிவில் “ கழுதை ஒருநாளாவது பூ வைத்தாத்தானே . எல்லோரும் சிரித்தார்கள் , எனக்கு சிரிப்பு வரவில்லை “ என்ற கடைசி வரியில்தான் எழுத்தாளனின் ஆன்மா இருக்கிறது ) சிற்பியின் நிறைவுரை சுருக்கமாக இருந்தது .
கி ரா என்ற அத்தியாயம், இயல்பான மனித குறியீடு . நமது பாராட்டுகள் வெறும் ‘ ஜிகினா ‘ வேலைதான் என நானும்
தம்பதிகளுக்கு சிறுமி கண்மணி செல்மா மாலை அணிவித்தார் . விழாக் குழுவின் சார்பில் மணிவிழாப் பரிசாக ரூ 2001 பெட்டியில் வைத்து வழங்கப் பட்டது .
கி . ரா . ஏற்புரை தொடங்கியபோது மணி இரவு 9-30 . மனம் திறந்து அனைவரும் பேசிய பேச்சு எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது – ரசனையை அழித்துவிட்டு நாம் வாழ முடியாது . புரட்சியும் வேண்டும் ; ரசனையும் வேண்டும் – யார் , யார் எழுதிய நூல்களையெல்லாமோ மொழி பெயர்க்கும் நிறுவனங்களின் பார்வையில் என் நூல்கள் படவில்லையே என ஏற்புரை சுருக்கமாக இருந்தாலும் நிறைவாகவே இருந்தது .
கி . ரா வின் நெற்றியில் அரக்குக் கலரில் அழகான குங்குமப் பொட்டு . அதென்ன அரக்குக் கலர் ? திருமதி கி . ரா வின் பட்டுச் சேலையின் பார்டர் கலர் அரக்கு .
விஜயா பதிப்பகம் நெல்லை வேலாயுதம் நன்றி சொல்ல விழா இனிது நிறைவுற்றது .
தகவல்களும் படங்களும் – கவிஞர் மீராவின் “ அன்னம் விடுதூது “ நவம்பர் 1984 மாத இதழ் . [ கட்டுரையாசிரியர் – இராகுலதாசன் ]
#கி_ரா
No comments:
Post a Comment