இன்றைய தினமணியில் (06.01.2020) #தமிழக_கேரள_நதிநீர்_சிக்கல்களை எப்படி தீர்க்கப் போகிறோம் மற்றும் இன்னும் பலவிடயங்கள்அறியப்படாமலே இருக்கின்றன. அது குறித்தான எனது பத்தி இன்று வெளியாகியுள்ளது.
#கவனிக்கப்படாத_தமிழக_கேரள #நதிநீர்_சிக்கல்கள்.
-------------------------------------ழக - கேரள முதல்வர்கள் சந்தித்து இரு மாநில நதிநீர்ப் பிரச்சனைகள் குறித்து திருவனந்தபுரத்தில் பேசியது செய்திகளாக வந்தன. அப்போது சில பிரச்சனைகள் தான் பேசப்பட்டது. இருமாநில அனைத்து நதிநீர் பிரச்சனைகளை குறித்தும் பேசவே இல்லை என்ற விமர்சனமும் எழுந்தது.
அதன் பின், கடந்த 11.12.2019 அன்று தமிழக கேரள பொதுப்பணித்துறை அதிகாரிகளும் இரண்டு அரசு பிரதிநிதிகளும் சந்தித்து பரம்பிக்குளம் ஆழியாறு பிரச்சினை குறித்து சென்னையில் விவாதித்தனர்.
இந்த கூட்டத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு பிரச்சினை மட்டுமில்லாமல் தொழில்நுட்பம் நீர் பகிர்வு குறித்து பேசியதாக பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கப்பட்ட்து. மீண்டும் ஜனவரி – பிப்ரவரி திருவன்ந்தபுரத்தில் கூடிப் பேச இருப்பதாகவும் தெரிவித்தனர். பரம்பிக்குளம் ஆழியாறு நதிகளின் ஒப்பந்தம் மாதந்தோறும் நீர் பகிர்வீடு, வழங்கலைக் குறித்து தீர்வு எட்டப் போவதாகவும் இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட அதிகாரிகள் வெளிப்படுத்தினர். இந்த கூட்ட்த்தில் தமிழக அரசின் பிரதிநிதிகள் பொதுப்பணித்துறை செயலாளர் கே. மணிவாசகம் தலைமையிலும் கேரள அதிகாரிகள் அம்மாநில நீர்வளத்துறை செயலாளர் பி. அசோக் பங்கேற்றுக் கொண்ட கூட்டம் சென்னை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.
அந்த விமர்சனத்தை உறுதி செய்யும் வகையில், ஆழியாறு – பரம்பிக்குளம், பாண்டியாறு – புன்னம்புழா திட்டங்களுக்கு மட்டும் பேச தலா 5 பேர் கொண்டு மொத்தம் 10 பேர் அடங்கிய குழு அமைக்கப்படும் என்று செய்தியாளர்கள் மத்தியில் இருமாநில முதல்வர்கள் அறிவித்தனர். கடந்த 17-10-2019 அன்று தமிழக அரசாணை எண். 155ன்படி கே. மணிவாசன் ஐ.ஏ.எஸ், ஆர். சுப்பிரமணியன், ஆர். இளங்கோவன், பி.முத்துசாமி, ஏ. முனவர் சுல்தானா ஆகிய ஐந்து பேர் ஆழியாறு – பரம்பிக்குளம் பிரச்சனையை மற்றும் கே. மணிவாசன் ஐ.ஏ.எஸ், ஆர். சுப்பிரமணியன், இ. தமிழரசன், எஸ். சிவலிங்கம் மற்றும் ஏ. முனவர் சுல்தானா ஆகிய ஐந்து பேர் பாண்டியாறு – புன்னம்புழா பிரச்சனையை குறித்து கேரள அரசோடு பேச குழு அமைத்துள்ளது.
அப்படியெனில் குமரி மாவட்ட நெய்யாறிலிருந்து கொங்கு மண்டலம் வரை கீழே குறிப்பிட்ட பிரச்சனைகளை குறித்து விவாதிக்க வாய்ப்பில்லையா? இவையெல்லாம், 40 ஆண்டுகளுக்கு மேலாக தீர்க்கப்படாத திட்டங்களாக தென்மாவட்டங்களில் இருந்து கொங்கு மண்டலம் வரை மக்கள் எதிர்பார்த்திருக்கும் பல பிரச்சனைகளாகும். அதை குறித்து,
தமிழகத்தின் தென் மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகியவை வறண்ட பகுதிகளாக உள்ளன. இவைகளைப் போன்றே மேற்குத் தொடர்ச்சி மலைகளையொட்டிய மாவட்டமான கோவை மாவட்டமும் வறண்ட பகுதியாகும். இம்மாவட்டங்களில் வறண்ட காலங்களில் அருந்துவதற்குக் கூடக் குடிநீர் இல்லாத அவலநிலை அடிக்கடி ஏற்படுகிறது. கேரள மாநிலத்தில் மேற்கு நோக்கிச் செல்லும் நதிகளின் எஞ்சிய நீரை அணைகள் கட்டிச் சுரங்கங்களின் வரியாகத் தமிழகத்திற்கு கொண்டு வந்தால், தமிழகத்தின் தென் மாவட்டங்கள் நிச்சயம் வளம் பெறும். இப்பிரச்சனையைப் பல வருடங்களாகத் தமிழகம் வலியுறுத்தி வருகிறது. அவ்வாறு இத்திட்டத்தை நிறைவேற்றாவிட்டால் பிற்காலத்தில் இப்பகுதிகள் பாலைவனங்களாக அமையும். தென்மாவட்டங்கள் வானம் பார்த்த கரிசல் மற்றும் செம்மண் அடங்கிய பகுதிகளாகும்.
கேரளத்தில் உற்பத்தியாகும் நதிநீரை முழுமையாகக் கேரள மக்கள் பயன்படுத்த முடியவில்லை. அதிகமான மலைப் பிரதேசங்கள் இருப்பதால் விவசாய நிலங்கள் குறைவு. கேரள மாநிலத்தின் நீர்வளம் தமிழகத்தை விட அதிகமானதாகும். தமிழ்நாட்டின் நீர்வளம் சுமார் 1,350 டி.எம்.சி. ஆகும். ஆனால், கேரளத்தின் நீர்வளம் சுமார் 2,500 டி.எம்.சி ஆகும். இதில் சுமார் 1,100 டி.எம்.சிக்கும் அதிகமான நீர் வீணாகி அரபிக் கடலில் சேருகிறது. (இந்த தண்ணீரின் அளவு மேட்டூர் அணையிலுள்ள நீரைப் போல சுமார் 11 மடங்கு ஆகும்.) கேரள மாநிலத்திற்கு தேவையான நீர் சுமார் 850 டி.எம்.சி. மீதமுள்ள நீரைத் தமிழகத்திற்குக் கொடுத்தால் சுமார் 8.20 இலட்சம் ஏக்கர்கள் பாசன வசதி பெறும். இதனால் கேரளத்திற்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை.
கேரளத்தில் மேற்கு நோக்கி பாயும் 85 நதிகள் உள்ளன. 1,98,000 மில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் இந்நதிகளின் மூலம் செல்கிறது. இதில் சுமார் 1 இலட்சத்து 25 ஆயிரம் மில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் செல்கிறது என்று திட்டக்குழுவின் 1978-ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது. மேற்கு நோக்கிப் பாயும் நதிகளைத் தமிழகத்திற்கு திருப்புவது பற்றி மத்திய அரசு குழு ஒன்றை 1976-ஆம் ஆண்டு அமைத்து இத்திட்டத்தைப் பற்றி ஆராய்ந்து இந்த நதிநீரைத் தமிழகத்திற்குத் திருப்புவதற்குச் சாத்தியக் கூறுகள் உள்ளன என அக்குழு கூறியது. அதன்பின்பு, மத்திய, தமிழக கேரள அரசுகள் சுமார் 20 முறைக்கும் மேல் இது பற்றிப் பேசியும் எவ்விதத் தீர்வும் எட்டப்படவில்லை. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இப்பிரச்சனை பல முறை எழுப்பப்பட்டுள்ளது.
கேரளத்தில் ஓடுகின்ற சாலியாறு, பாரதப்புழா, சாலக்குடி, பெரியாறு, ஆழியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகள் தமிழகத்தில் உள்ளன. இந்த நதிகள் கேரள மாநிலத்தில் பாலக்காடு, மல்லாபுரம் ஆகிய இடங்களில், பாய்ந்து அந்தப் பகுதிகளுக்கு வளம் சேர்க்கின்றன. அதைப் போன்று கீழ்க்கண்ட நதிநீர்ப் படுகையிலிருந்து தமிழகத்திற்கு நீர் கொடுத்தால், தமிழகம் நிச்சயம் வளம் பெறும்.
சாலியாறு படுகையில் உள்ள பாண்டியாறு, புன்னம்புழா, மேயாறு, சோலத்தபுழா, பன்சிகல்ல ஆகிய நதிநீர் மூலம் கோவை மாவட்டம் பயன்பெறும். இதில் எஞ்சிய நீர் சுமார் 150 டி.எம்.சி. ஆகும். இந்த நீரில் சுமார் 18 டி.எம்.சி. நீரைத் திருப்பினால் 280 இலட்சம் ஏக்கர்களுக்கு பாசன வசதி பெறலாம்.
பாம்பாற்றின் மொத்தம் நீர்பிடிப்பு சுமார் 230 டி.எம்.சி. ஆகும். இதில் எஞ்சிய நீர் சுமார் 180 டி.எம்.சி ஆகும். இதில் திருப்ப வேண்டிய அளவு சுமார் 25 டி.எம்சி. ஆகும். இதனால் தமிழகத்தில் விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வளம் பெறும்.
அச்சன்கோவில் ஆற்றில் செல்லும் நீரின் அளவு 77 டி.எம்.சி. ஆகும். இதில் கிடைக்கும் எஞ்சிய நீர் சுமார் 9 டி.எம்.சி. அளவு தமிழகத்திற்கு திருப்பினால் திருநெல்வேலி, குமரி மாவட்டத்தின் சில பகுதிகள் பயன் பெறும்.
பெரியாறு படுகையில் ஆனைமலை, இடுக்கி, கல்லாறு போன்ற மூன்று ஆறுகளிலிருந்து நீர் செல்லும் அளவு சுமார் 380 டி.எம்.சி ஆகும். இதில் உள்ள எஞ்சிய நீரான சுமார் 320 டி.எம்.சியை தமிழகத்திற்குத் திருப்பினால் கோவை, மதுரை, இராமநாதபுரம் ஆகிய பகுதிகள் பயனடையும். இதனால் மதுரை மாநகருக்குக் குடிநீர் வசதி பெற வாய்ப்புள்ளது.
நெய்யாற்றில் இரண்டு கால்வாய்கள் உள்ளன. இதில் ஒரு கால்வாய், 1956-இல் கேரள மாநிலத்திலிருந்து சில பகுதிகள் தமிழ்நாட்டில் இணைக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்குப் பாசன வசதி செய்ய அமைக்கப்பட்டது. ஆனால், சுமார் 160 கனஅடி தண்ணீர் தமிழகத்திலுள்ள இந்தப் பகுதிகளுக்கு கேரள அரசு கொடுக்க வேண்டும். ஆனால், கேரள அரசு கொடுப்பதற்கு மறுத்து வருகிறது. இதனால், சுமார் 9,000 ஏக்கர் நிலம் வீணாகிறது.
கல்லட, அட்டிங்கல், கரமன ஆகிய ஆறுகளில் நீர் செல்லும் அளவு சுமார் 160 டி.எம்.சி. ஆகும். இதில் எஞ்சிய நீரான சுமார் 110 டி.எம்.சி.யில் தமிழகத்திற்குத் திருப்ப வேண்டிய அளவு வெறும் 16 டி.எம்.சி. ஆகும். இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் பயன்பெறுகின்றன.
இந்தப் பிரச்சனையில் கேரள அரசு சரியான ஒத்துழைப்பு நல்கவில்லை எனத் தெரிகிறது. கேரள அரசு இந்த எஞ்சிய நீரைத் தமிழகத்திற்கு திருப்பினால் கேரளத்தில் மீன்பிடிப்புத் தொழில் பாதிக்கும் என்ற விநோதமான காரணம் கூறப்படுகிறது. ஆனால் தமிழகத்திற்கு வெறும் 82 டி.எம்.சி. அளவு நீர் தான் தேவைப்படுகிறது. இதனால் கேரளத்திற்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை.
ஐரோப்பாவிலுள்ள யுகோஸ்லாவியா கேரள மாநிலத்தினைப் போன்ற மலைப் பிரதேசமாகும். அதற்கு அண்டை நாடான ருமேனியாவுக்கு யுகோஸ்லாவியா தன் நாட்டிலுள்ள எஞ்சிய நீரை கொடுத்து உதவும் போது, இந்தியாவிலுள்ள ஒரு மாநிலத்தின் எஞ்சிய நீரை மற்ற மாநிலத்திற்குக் கொடுப்பதால் எந்தவிதமான சிக்கலும், பாதிப்பு ஏற்படாது. இதைப் போன்று சோவியத் நாட்டிலுள்ள துருக்மேனியா மாநிலத்திலுள்ள கேரிகம் கால்வாய் அண்டைய மாநிலங்களுக்கு எஞ்சிய நீரைக் கொடுத்து உதவி செய்கிறது. சோவியத் நாட்டிலுள்ள வடமாநிலங்களில் பாயும் நதிநீர் தென்மாநிலங்களுக்கு திருப்பப்பட்டுள்ளது.
கேரளாவின் அச்சன்கோவில்–பம்பை தமிழகத்தின் வைப்பாறோடு இணைப்பது, குமரி மாவட்ட நெய்யாறு, நெல்லை மாவட்டத்தின் அடவிநயினார், உள்ளாறு, செண்பகத்தோப்பு, விருதுநகர் மாவட்டம் அழகர் அணைத்திட்டம் மற்றும் முல்லைப் பெரியாறு, பாண்டியாறு - புன்னம்புழா, ஆழியாறு - பரம்பிக்குளம், சிறுவாணி, பம்பாறு என பல பிரச்சனைகளுக்கும் தீர்வுகாண வேண்டும். ஆனால், தமிழகத்தின் உரிமைகளான நதிநீர் பிரச்சினைகளில் தொடர்ந்து கேரளா சிக்கலை உருவாக்கிக்கொண்டு வரும் போக்கு கண்டனத்துக்குரியது ஆகும்.
செண்பகவல்லி பிரச்சினையிலும் 1992 லிருந்து கேரளா பிரச்சனை செய்து வருகின்றது. அப்போதும் கேரளா செண்பகவல்லியில் இருந்த தடுப்புச் சுவரையும் இடித்தது. ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்கு கொடுக்க முடியாது என்று வினோதமான ஒரு சட்டத்தையும் கேரளா சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இம்மாதிரி எந்த மாநிலத்திலும் நடந்தது இல்லை. 2002ல் அன்றைய கேரள எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் நெல்லை மாவட்டத்தின் எல்லையிலேயே இருக்கும் அடவிநயினாரை இடிக்க கடப்பாரை மம்பட்டியுடன் வந்தாரே, இவரும் உலகவாதத்தையும், பொதுவுடைமையை பேசுகிறார்.
கேரளாவிற்கு கல்பாக்கம் அணு மின்சாரம் உட்பட அரிசி , காய்கறிகள், எண்ணெய், மணல், வைக்கோல் போன்ற பல அத்தியாவசியப் பொருட்களை நாம் தமிழகத்திலிருந்து அனுப்பி வைக்கிறோம். ஆனால், ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூடத் தரமாட்டோம், வீணாக கடலுக்குத் தான் விடுவோம் என்றும் சமஷ்டி அமைப்பை மதிக்காமல் கேரளா தொடர்ந்து வம்பிழுத்து வருகிறது. இதுகுறித்து மத்திய அரசு பல குழுக்களை அமைத்து அறிக்கைகளை வழங்கியும், கேரள அரசு அந்த அறிக்கைகளின் பரிந்துரைகளை பரிசீலிக்காமலேயே தூக்கி எறிந்தது. கடந்த 1983இல் நான் தாக்கல் செய்த நதிநீர் இணைப்பு குறித்தான வழக்கிலும் கேரளத்தின் மேற்கு நோக்கி பாயும் 85 நதிகளில் சிலவற்றை தமிழகத்திற்கு திருப்பியும், அச்சன்கோவில் – பம்பை வைப்பாறோடு இணைக்க வேண்டியும், 2012இல் உச்ச நீதிமன்றம் ஒரு சாதகமான தீர்ப்பினை அளித்தும் இந்த பிரச்சனைகளுக்கான தீர்வுகள் ஆமை வேகத்தில் உள்ளது.
ஆனால், இவ்வளவு சிக்கல்கள் கேரளத்தோடு இருந்தும் தமிழக அரசு பாண்டியாறு – புன்னம்புழா, ஆழியாறு – பரம்பிக்குளம் சிக்கலை மட்டும் பேச குழு அமைத்துள்ளது. இந்த பிரச்சனைகளும் முக்கியம் தான் மறுக்கவில்லை. ஆனால், நீண்ட நெடுங்காலமாக மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கும் தீர்வு எட்டப்பட வேண்டாமா? இவ்வளவு பிரச்சனைகள் இருப்பதாவது அரசின் கவனத்திற்கு வந்துள்ளதா? ஆட்சிகள் மாறலாம், ஆனால், நாட்டின் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் தீர்வு என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். இந்த நிலையில் கேரள-தமிழக அனைத்து நதிநீர் சிக்கல்களுக்கும் பேச குழு அமைத்திருக்க வேண்டாமா?
1
#தமிழக_கேரள_நதிநீர்_சிக்கல்களை
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
06-01-2020.
#KSRPostings #KSRadhakrishnanPostings
No comments:
Post a Comment