#திருப்பாவை
#கோதைமொழி 22.மார்கழி
" *அபிமான பங்கமாய்* "
அங் கண் மா ஞாலத்து அரசர், "அபிமான
பங்கமாய்", வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே,
சங்கம் இருப்பார் போல், வந்து தலைப் பெய்தோம்!
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
அம் கண் "இரண்டும் கொண்டு", எங்கள் மேல் நோக்குதியேல்!
எங்கள் மேல் சாபம் இழிந்து! ஏல்-ஓர் எம் பாவாய்!
துஷ்ட நிக்ரஹ, சிஷ்ட பரிபாலன! - இதுவா கடவுளின் குணம்? சேச்சே!
*துஷ்ட நிக்ரஹ, சிஷ்ட பரிபாலன* = துஷ்டர்களை "அழித்து", நல்லோரைக் காப்பேன்??? - இல்லை! இல்லவே இல்லை! இது இல்லை பொருள்!
நி-க்ரஹம் = அடக்கி ஆள்வது! அனு-க்ரஹம் = அன்பால் ஆள்வது!
துஷ்ட நிக்ரஹ, சிஷ்ட பரிபாலன = தீயோர்களின் தீமையை "அடக்கி", நல்லோரைப் பரிபாலிப்பேன்!
நல்லோரை ஆதரிப்பேன்... சரி! அப்போ தீயோர்கள்? அவங்க கதி??
*தீயோரின் கதி = அபிமான பங்கம்* !
பெருமை அழித்தல்! தன் பேராசைகளுக்காக பெருமை தேடிக் கொள்றாங்களே! அந்த வீண் பெருமையை அழிப்பேன்! அவர்களை அடக்கி ஆள்வேன்! எப்படி?
அவர்கள் அபிமானத்தைப் பங்கப் படுத்துவேன்! தானாய் அடங்கிப் போவார்கள்!
*காவியங்களில் சொல்லப்படுவது என்னவென்றால்* ,
*தனிமனிதன்* , *ஒழுக்கத்துக்கும் பேராசைக்கும் இடையே* , *எப்படி எல்லாம் கிடந்து போராடுகிறான் என்பது தான்* !
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல் - குறளில் தத்துவமாக இருக்கு! காவியத்தில் புரிந்து கொள்ளும் வண்ணம் கதையாக இருக்கு! அவ்வளவு தான்!
ஆனால் நாம் தான், ஹீரோ-வில்லன், இராமன்-இராவணன் என்று பார்த்துப் பார்த்தே பழக்கப்பட்டு போய் விட்டோமே? கருத்துக்களை விட்டுருவோம்; ஆட்களை மட்டும் கெட்டியாப் பிடிச்சிக்குவோம்!
* இராமன் காட்டிய பொறுமையும், சாத்வீகமும் தேவையா?
* இல்லை எப்பவுமே ஹீரோ-வில்லன் தான் தேவையா?
எது வேண்டுமோ, அதை அவரவர் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்!
ஆனால் ஒரே ஒரு விஷயம்:
இராம கதையை நன்கு அறிந்தவர்கள் இதையும் அறிவார்கள்! இராவணன், இறைவனின் அன்புக்குரிய வாயிற் காப்போன் என்று! அவர்கள் நாடகம் முடிந்து விட்டது! ஆனால் நம் புரிதலும் சண்டையும் தான் நடந்து கொண்டே இருக்கு! 🙂
*இறைவனின் குணம் அழித்தல் கிடையாது* ! *அபிமான பங்கம் தான்!* அதை நினைவில் இருத்துங்கள்!
* முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்பான்!
* சிறு பேர் அழைத்தனவும், சீறி, "அருளா"தே! இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்!
அங்கண் மா ஞாலத்து அரசர் = அழகிய இடங்கள் (அங்கண்) கொண்ட பெரிய உலகம் (மா ஞாலம்)!
இன்றைய மா-ஞாலம் என்ன?
அரசியல் உலகம், வணிக உலகம், அறிவியல் உலகம், ஆன்மீக உலகம், சினிமா உலகம் = இப்படிப் பல உலகங்கள் இருக்குல்ல?
ஒவ்வொரு உலகத்திலும் தலைவர்கள், அதிகாரிகள்-ன்னு இருக்காங்க-ல்ல?
நம்ம ஆபீஸையே எடுத்துக்குங்க! அலுவல்+உலகம்! அதுல நாமளே கூட தலைவராவோ, பொறுப்பில் இருப்பவராவோ இருக்கோம்-ல? எல்லாரும் இந்நாட்டு மன்னர்! இப்படி மன்னர்களான நாமும்...
அபிமான பங்கமாய்= பெருமை அழிந்து போய், "அபிமானம் பங்கப்" பட்டு
என்னென்ன அபிமானம் எல்லாம் அழியுதாம்? என்னென்ன பெருமை எல்லாம் அழியுதாம்?
1. தேகா அபிமானம் = உடலே நான்!
2. ஆத்மா அபிமானம் = ஆத்மாவே நான்!
3. ஸ்வதந்திரா அபிமானம் = நான் சர்வ சுதந்திரன்! எங்க ரெண்டு பேருக்குள்ள ஒத்துப் போயிட்டா, உலகத்தில் எதுவுமே தப்பில்லை!
4. பந்து அபிமானம் = என்னைக் காப்பாற்றக் கூடியது என் உறவினர்கள் மட்டுமே!
5. உபாய அபிமானம் = ஞான யோகம், கர்ம யோகம், பக்தி யோகம்-ன்னு எனக்குத் தெரிஞ்சதை பண்ணிக்கிட்டு இருப்பேன்! யாராச்சும் கேள்வி கேட்டா கோவம் பொத்துக்கிட்டு வரும்!
அசுரர்கள் தவம் பண்ணி வரம் வாங்கிக்கிட்டு ஜாலியா இருந்தாங்க! அது போல நாம் உபாயம் பண்ணி மோட்சத்தை வாங்கிக்கிட்டு ஜாலியா இருக்கலாம்! இப்படியும் ஒரு சுயநலம் 🙂
இப்படியான தற் பெருமைகள், அபிமானங்கள் எல்லாம் பங்கப்படுகிறதாம் இறைவனின் சன்னிதியில்! "அபிமான பங்கமாய்", வந்து
நின் பள்ளிக் கட்டிற் கீழே!
* 1000.00 Rs. டிக்கெட் வாங்கிக்கிட்டு வந்து, நின் பள்ளிக் கட்டிற் கீழேவா? - இல்லை!
* "அபிமான பங்கமாய்" வந்து, நின் பள்ளிக் கட்டிற் கீழே!!! - புரியுதா?
இப்படிச் சேவிப்பதே சேவை! தன் படோபடங்களை, அபிமானங்களை விட்டொழித்து, அடியார்களுடன் அடியார்களாய், கால் கடுக்க நின்று சேவிப்பதே-"தர்ம" தரிசனம்! - "அபிமான பங்கமே" தர்மம்!
வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே = நாங்க எல்லாம் வந்து நீ பள்ளி கொண்ட கட்டிலின் "கீழே"!
நல்லாக் கவனிங்க! "மேலே" இல்ல! "கீழே"!
* 1000.00 Rs. டிக்கெட் வாங்கிக்கிட்டு, துரியோதனன், பள்ளிக் கட்டின் மேலே நின்றான்!
* "தர்ம" தரிசனமாய், அர்ச்சுனன், பள்ளிக் கட்டின் கீழே நின்றான்! காலடியில் நின்றான்!
யாருக்கு அருள் கிட்டியது? "அபிமானம் பங்கமாய்" வந்தவனுக்கு அருள் கிட்டியது!
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம் = ஒரு சபைக் கூட்டம் போல, உன் அரசவைக்கு வந்தோம்!
ஆலயமே அரசாங்கம்! அடியார்களே குடி மக்கள்! அவர்கள் நலனே அரசாங்கப் பணி!
தலைப் பெய்தோம் = தலைகள் பல திரள, உன் சன்னிதியில் (மழை போல) பெய்தோம்!
தலைப்பு எய்தோம் = தலைப்பில் (முகப்பில்), உன்னைக் கிட்டக்க வந்து ஆசை ஆசையாச் சேவிச்சோம்!
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே = கால் சலங்கையில் இருக்கும் சிறுசிறு கிங்கிணிகள்! ஒவ்வொரு கிங்கிணி வாய்ப்புறமும், பாதி மூடிய தாமரைப்பூ போல இருக்கும்! அதுக்கு உள்ளாற ஒரு சின்ன மணி! ஜல்-ஜல்-ன்னு சத்தம் போடும்! ஜதி சொல்லும்!
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ? = அது போல பாதி மூடியும், பாதி மூடாமலும், அரைத் தூக்கத்தில் எங்களைப் பார்க்காதே கண்ணா!
உன் செவ்வரி ஓடிய கண்ணை நல்லாத் தொறந்து, எங்களை முழுக்க முழுக்கப் பாரு! அந்தப் பெரியவாய கண்களால் எங்களைக் கடாட்சி!
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல் = ஒரே நேரத்தில் சந்திரனும் சூரியனும் எழுந்தாற் போலே...
* பெருமாளின் வலக்கண் சூரியன் = காலை இருளை ஒரேயடியா விரட்டி விடும்! துன்பம் எல்லாம் ஓட்டும்!
* பெருமாளின் இடக்கண் சந்திரன் = மாலை இருளைச் சிறிது சிறிதாய் விரட்டும்! வினைகளை, கர்ம பலனைக் கொஞ்சம் கொஞ்சமா நீக்கும்!
அம் கண் "இரண்டும்" கொண்டு, எங்கள் மேல் நோக்குதியேல் = எங்களுக்கு சூரியன், சந்திரன் ரெண்டுமே ஏக காலத்தில் வேணும்! துன்பமும் ஓடணும்! வினையும் அழியணும்! அதுனால, அழகிய ரெண்டு கண்ணையும் நல்லாத் திற! விரிய விரியத் திற! திறந்து திறந்து எங்களைப் பாரு!
எங்கள் மேல் சாபம் இழிந்து = அப்படிப் பார்த்த மாத்திரத்தில், எங்கள் சாபமெல்லாம் இழியும் (தீரும்)! வினை எல்லாம் இழியும் (அவியும்)! கர்ம பலன் காணாது கரையும்!
போய பிழையும், நின்றனவும், புகுதருவான் = சஞ்சிதம், பிராரப்தம், ஆகாம்யம் -என்னும் கர்மாக்கள்! இவை எல்லாம் தீயினில் தூசாகும்!
உன் திருக்கண்கள் "இரண்டையுமே" எங்கள் மேல் சார்த்தி அருள்!
திருவேங்கடவா, உன் நேத்ர தரிசனத்தைக் கொடு!
கண் திறந்து பார்த்து,
எங்களை எற்றுக் கொள் பெருமாளே! ஏற்றுக் கொள்!
எங்கள் "அபிமான பங்கமாய்",
ஏல்-ஓர் எம் பாவாய்! ஏல்-ஓர் எம் பாவாய்!
#திருப்பாவை
#கோதைமொழி
No comments:
Post a Comment