#திருப்பாவை
#கோதைமொழி 21.மார்கழி-
*ஊற்றம் உடையாய்* *பெரியாய்*, *உலகினில்*
*தோற்றமாய்* *நின்ற* *சுடரே*
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப,
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்!
ஆற்றப் படைத்தான் மகனே, அறிவுறாய்!
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயில் எழாய்!
மாற்றார் உனக்கு வலி தொலைந்து, உன் வாசற் கண்
ஆற்றாது வந்து, உன் அடி பணியுமா போலே,
போற்றி யாம் வந்தோம், புகழ்ந்து! ஏல்-ஓர் எம் பாவாய்!
மகான்களுக்கு விரோதிகள் ஏன் ஏற்படுகிறார்கள்? மகான்கள் கிட்ட இருக்கும் குறைகள் காரணமா? இல்லை! மகான்கள் கிட்ட இருக்கும் நிறைகள் தான் காரணம்!
* மகான்களின் அப்பழுக்கற்ற ஞான யோகம்,
* அந்த ஞானத்தை செயல் வடிவில் கொண்டு வரும் கர்ம யோகம்,
* இவை இரண்டையும் இணைத்து, "தொண்டுக்கே" என்று இருக்கும் பக்தி யோகம்!
இதனால் மகான்களின் சொல் அம்பலம் ஏறுகிறது! அது சில குறுகிய அறிவுள்ளவர்களின் பொறாமையைத் தூண்டுகிறது! பொறாமை விரோதிகளைச் சிருஷ்டிக்கிறது!
அதை விட முக்கியமான காரணம், மகான்கள் வெறுமனே கதாகாலட்சேபம்-ன்னு பேசி விட்டுப் போக மாட்டார்கள்! அதைச் செயலாக்க முனைவார்கள்!
நம் கொள்கைகளுக்காக இறைவன் இல்லை! இறைவனுக்காகவே நம் கொள்கைகள்!
ஆட்களையும், ஆட்கள் உருவாக்கிய கொள்கைகளையும் பின்னுக்குத் தள்ளி, இறைவனையும், இறை அன்பையும் மட்டுமே முன்னுக்குத் தள்ளுவார்கள்! - இது இன்னும் எரிச்சலைத் தோற்றுவிக்கிறது!
அப்படி முளைத்தது தான் ஸ்ரீரங்கம் கோயில் ஸ்தனத்தார்கள் விரோதம், இராமானுசர் மீது!
அப்படி முளைத்தது தான் சைவத் திருமுறைக் கழகத்தார் விரோதம், வள்ளலார் மீது!
சரி, அதற்காக, "மாற்றார்களை" ஒழித்து விட முடியுமா என்ன? தவறல்லவா!
"மாற்றாரை" மாற்றுவது எப்படி? = "மாற்றாரின்" வலிமையை (அசட்டுப் பிடிவாதத்தை) தொலைக்க வைத்தால், மற்ற விரோதங்கள் தானே தொலையும்!
மாற்றார் வலி தொலைந்து உன் வாசற் காண்
ஆற்றாது வந்து, உன் அடி பணியுமா போலே
என்று ஆண்டாளும் இதற்கு வழி சொல்லிக் கொடுக்கிறாள்! மாற்றாரின் வலிமையை (அசட்டுப் பிடிவாதத்தை) அசைத்துப் பார்த்து, அதைத் தொலைக்கச் சொல்கிறாள்!
எதைப் பிரமாணம் என்று அசட்டுத்தனமாக நம்புகிறார்களோ, அதையே அசைத்தால் வலி தொலையும்!
இப்படி அசைத்து அசைத்துத் தான், முன்னாள் "மாற்றாரான" ஒருவரை, "போற்றார்" ஆக்கினார் நம் இராமானுசர்! திருவரங்கத்து அமுதனார் என்ற மாற்றார், பின்னாளில் போற்றுவார் ஆனார்!
* அவருடைய சட்டம் = பாகவத-பகவத் கைங்கர்யம்!
* அவருடைய ஆயுதம் = கடல் போன்ற கருணை!
எதிரியை எதிரியாகப் பார்க்காது, "மாற்றார்" என்று பார்த்த கருணை!
மாற்றார், உனக்கு வலி தொலைந்து, உன் வாசற் கண்,
ஆற்றாது வந்து, அடி பணியுமா போலே,
போற்றி யாம் வந்தோம், புகழ்ந்து, "ஏல்-ஓர்" எம் பாவாய்!
ஏற்ற கலங்கள், எதிர் பொங்கி மீதளிப்ப = பாலைக் கறக்கும் கலத்தில், பால் வேகமாக நிரம்பி, வழிகிறது!
பால் கறக்கும் கலம் இரண்டு வகைப்படும் = ஏற்ற கலம்/மாற்ற கலம்
ஏற்ற கலம் = அப்போது கறந்து கொண்டிருக்கும் கலம்! மாற்ற கலம் = அடுத்து கறக்கத் தயராய் இருக்கும் கலம்!
ஏற்ற கலத்தில் இருந்து மாற்ற கலத்துக்கு மாற்றுவதற்குள், பால் பொங்கி, மீதளிக்கிறது! பீய்ச்சி அடிக்கிறது! அப்படி ஒரு செழுமையான பசுக்கள்!
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் = இப்படி தனக்குன்னு உள்ளுக்குள் மறைத்து வைக்காது, தாராளமாய்ப் பால் சொரியும் இந்தப் பசுக்கள், வள்ளல்கள்!
ஆற்றப் படைத்தான் மகனே, அறிவுறாய் = இப்படிப் பால் செல்வத்தைப் பெருக்கும் ஆற்றலைப் பெற்ற நந்த கோபாலன் மகனே, கண்ணா! தூக்கம் கலைந்து விட்டதல்லவா? போதும்! எழு! எழு!
ஊற்றம் உடையாய்! பெரியாய்! = சதா, காக்கும் கருத்து உடையவனே! பெரியவனே!
உலகத்தில் உன் பிள்ளைகள், உன்னைத் தவிர மற்ற எல்லாவற்றையும் சட்டை செய்கிறார்கள்! உன்னை மட்டும் தான் அவர்கள் கண்டு கொள்வதில்லை!
இவர்கள் உன்னைக் கண்டு கொள்ளவில்லை என்றாலும், ஒரு நல்ல அம்மாவைப் போல, சதா இவர்களை நீ கண்டு கொள்கிறாயே! அதிலேயே ஊற்றம் உடையவனா, கருத்துடையவனா இருக்கிராயே! பெரியோனே! பெரிய பெருமாளே!
உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயில் எழாய் = உலகத் தோற்றத்துக்குக் காரணமாக நின்ற தனிப் பெரும் ஜோதி! அருட் பெருங் கருணை! துயில் எழுவாய்!
* ஊற்றம் உடையாய் = பரம் => வைகுந்தப் பரம்பொருள், பரப் பிரம்மம்! கட+உள்
* பெரியாய் = வியூகம் => திருப்பாற்கடலில் குறை கேட்டு அருளும் இறைவன்!
* உலகினில் தோற்றமாய் = விபவம் => நரசிம்ம, வாமன, ராம, கிருஷ்ணாதி அவதாரங்கள்!
* நின்ற = அர்ச்சை => அனைத்து ஆலயங்களில் இருக்கும் அர்ச்சா விக்ரக இறைவன்!
* சுடரே = அந்தர்யாமி => எல்லாரின் அந்தராத்மா, அடி மனசில், சுடராய் ஒளிரும் இறைவன்!
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே!
பெருமாளின் ஐந்து நிலைகளையும் ஒன்னே முக்கால் அடிகளில் காட்டி விடுகிறாள், கோதை! திருக்குறளில் ஐயன் வள்ளுவன் காட்டும் அதே பாணியில்!
* இறைவனுக்கே அளக்க மூன்று அடிகள் தேவைப்பட்டன!
* ஆனால் நம் கோதைக்கும், ஐயன் வள்ளுவனுக்கும், ஒன்னே முக்கால் அடிகளே போதுமாகி விட்டது பார்த்தீர்களா!
தெய்வத் தமிழுக்கே உரிய பெரும்பெரும் சிறப்பு இது தானோ?
மாற்றார் உனக்கு வலி தொலைந்து = உன்னை எதிர்த்த "மாற்றார்கள்" எல்லாருக்கும், அவர்கள் வலிமை என்னும் அசட்டுப் பிடிவாதத்தைத் தொலைக்க வைத்தாய்! அவர்களின் போலி அடிப்படையை நீ அசைத்து விட்டாய்! இனி அவர்கள் தாங்கக் கூடிய பிரமாணம்-ன்னு ஒன்றும் இல்லை!
அவர்கள் அடிப்படையை விட உன் "அடி"-ப்படையே உயர்ந்தது!
உன் வாசற் கண் ஆற்றாது வந்து = அந்த முன்னாள் "மாற்றார்கள்" எல்லாரும் உன் வாசல் தேடி வருகிறார்கள்! ஆத்த மாட்டாம வந்து, ஆற்றாது வந்து, தலை கவிழ்ந்து நிற்பார்களே!
உன் அடி பணியுமா போலே = அவர்கள் உன் "அடி"-ப்படையைப் பணிவது போலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து = நாங்களும் உன்னைப் போற்றி வந்தோம், புகழ்ந்து வந்தோம், பணிந்து வந்தோம்!
இது வரை எங்களையும், எங்கள் ஆச்சார-கொள்கைப் பிடிப்புகளையுமே, நாங்கள் முன் நிறுத்தி இருந்திருக்கலாம்! "எங்க கிட்ட இருக்கும் பெருமாள் சிலையை மட்டுமே மதிப்போம்! எங்களுக்குப் பிடிக்காதவங்க கிட்ட இருக்கும் பெருமாள் சிலைகளை மதிக்க மாட்டோம்" என்று நாங்கள் இருந்திருக்கலாம்! "எங்கள் அம்மனுக்கு மட்டுமே துதி செய்வோம்! எங்கள் விரோதிகளிடம் இருக்கும் அம்மன் ஆலயத்தில் பாட மாட்டோம்" என்று இருந்திருக்கலாம்!
ஆனால் இப்போது திருந்தி விட்டோம்!
தென்கலை-வடகலை, சைவம்-வைணவம், தமிழ் வழிபாடோ-வேறு வழிபாடோ எதுவாயினும், ஒன்றைப் புறம் தள்ளிச் சண்டையிடும் முன்னால்,
இது எம்பெருமானுக்கு உவக்குமா? இல்லை இதனால் அவன் மனசு வாடுமா?
.....என்று எங்களையே நாங்கள் இனி கேட்டுக் கொள்வோம்!
இனி உன்னையே முன்னிறுத்துவோம்! உன் உள்ள உகப்பே உகப்பு!
எங்களை ஏற்றுக் கொள் பெருமாளே! ஏற்றுக் கொள்!
ஏல்-ஓர் எம் பாவாய்! ஏல்-ஓர் எம் பாவாய்!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!
#திருப்பாவை
#கோதைமொழி
No comments:
Post a Comment