மார்கழி 20. #திருப்பாவை
#கோதைமொழி
" *கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்*
"
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்!
செப்பம் உடையாய், திறல் உடையாய், செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா, துயில் எழாய்!
செப்பென்ன மென் முலைச் செவ் வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை, நங்காய், திருவே, துயில் எழாய்!
உக்கமும் தட்டொளியும் தந்து, உன் மணாளனை,
இப்போதே எம்மை நீராட்டு! ஏல்-ஓர் எம் பாவாய்!
முப்பத்து மூவர் அமரர்க்கு = முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு! அட, அடிக்கடி சொல்றது தான்! யார் இந்த முப்பத்து முக்கோடி?
* அஷ்ட வசுக்கள் = 8
* ஏகாதச ருத்ரர்கள் = 11
* துவாதச ஆதித்யர்கள் = 12
* அஸ்வினி தேவர்கள் = 2
-----------------------------------
* மொத்தம் = 33, இவர்களே முப்பத்து மூவர்கள்! அவங்க ஆட்கள், கோடியால் பெருக்கினால் முப்பத்து முக்கோடி!
முன் சென்று = இப்படி அவர்களுக்கும் முன்பே சென்று காப்பவன் பரமாத்மா!
இறைவனின் திருநாமம், இறைவனைக் காட்டிலும் உயர்ந்தது! அதனால் தான் *கப்பம் தவிர்க்கும் கடவுளே-ன்னு சொல்லாது, கப்பம் தவிர்க்கும் "கலியே"-ன்னு சொல்லுறா கோதை! கலி = சத்தம், ஒலி, ஓசை* !
கப்பம் தவிர்க்கும் கலியே, துயில் எழாய்! = நடுக்கம் தீர்க்கும் ஒலியே! துயில் எழாய்!
* பக்தனின் வீட்டுக்கு, முப்பத்து மூவர் அமரர்க்கும் "முன்" சென்று, முதல் ஆளாய் நிற்கும்!
* அடியார்கள் நடுக்கம் தீர்க்கும்!
* அடியார் படு துயர் ஆயின எல்லாம் நிலந்தரம் செய்யும்! மண்ணோடு மண்ணாக்கும்!
* " *நாராயணா" என்னும் நாமம்* !
*கப்பம் தவிர்க்கும் கலியே = நாராயண நாமமே, துயில் எழாய், துயில் எழாய்* !!
கப்பம் தவிர்க்கும் கலியே = கோவிந்த நாமமே, துயில் எழாய், துயில் எழாய்!!
பொதுவா இறைவனுக்குத் தான் சுப்ரபாதம் பாடுவார்கள்!
இப்படித் திருநாமத்துக்கே திருப்-பள்ளி-எழுச்சி பாடிய ஒரே உள்ளம், கோதையின் உள்ளம்!
நம்மை எழுப்பி திருமந்திர உபதேசம் சொல்லாது, திருமந்திரத்தையே எழுப்பி நம்மிடம் அனுப்புகிறாள்.
* மற்ற எந்த பாட்டைக் காட்டிலும், பாவைக்கு மட்டும் ஏற்றம் இதனால் தான்!
* திருப்பாவை வேதம் அனைத்துக்கும் வித்து, இதனால் தான்!
ஹரி-ஓம்!
செப்பம் உடையாய், திறல் உடையாய் = நேர்மையும் உடையாய், திறமையும் உடையாய்!
செப்பம் = நேர்மை, செங்கோல்-ன்னு சொல்றோம்-ல? அதே போல் செப்பம்! வழுவாத நேர்மை! பல சமயங்களில், நேர்மையா இருந்தா திறமை அவ்வளவா இருக்காது! சாந்தமாப் போயிருவாங்க! திறமை இருக்குறவன் கிட்ட நேர்மை அவ்வளவா இருக்காது!
ஆனால் கண்ணன் = நேர்மை+திறமை ஒருங்கே உள்ளவன்!!
செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா = எதிரிகளுக்கு வெப்பம் கொடுக்கும் விமலனே! துயில் எழாய்! (செறு = பகை/போர்/எதிரி)
இறைவனுக்கு எதிரி இருக்க முடியுமா? யார் அவன் எதிரே நிற்க முடியும், எதிரியாய்? அவனுக்கு எதிரி-ன்னு யாருமே அல்ல! அவன் அனைவருக்கும் சம-புத்தி உடையவன்!
* தன்னை மிகக் கேவலமாய் இகழ்ந்த போதெல்லாம், இரண்யகசிபுவை ஒன்னும் செய்யவில்லை!
* தன் அடியாரை, அடியாள் வைத்து அடித்த போதெல்லாம், பக்தனைக் காப்பாற்றினான்! இரண்யனை ஒன்னும் செய்யவில்லை!
* ஆனால் தூணில் நிரூபிக்கா விட்டால், அடியாள் இல்ல, தந்தை-நானே உன்னைக் கொல்வேன் என்று அலறினான். அப்போது தான், சீரிய சிங்கம் பொங்கி எழுந்தது!
அவனுக்குச் செற்றார் என்று யாரும் இல்லை! அடியவர்களுக்குச் செற்றார்கள்! அந்தச் செற்றவருக்கு வெப்பம் கொடுக்கும் விமலன்! அது என்ன வெப்பம்?
செற்றவர்கள் = இறந்தவர்கள்! அந்த இறந்த உடல்களுக்கு வெப்பம் கொடுத்து நல்-உலகுக்குக் கடைத் தேற்றுகிறான் இறைவன்!
பாகவதா-அபசாரம் செய்தவர்களுக்கும் அறவருள் செய்யாது, மறவருள் செய்து, வெப்பம் கொடுத்து அனுப்புகிறான் அந்த விமலன்!
விமலன் = குற்றம் அற்றவன் = செற்றாரைக் கொன்றாலும், அந்தக் குற்றம் குறைகள், பிரம்மஹத்தி தோஷங்கள், எதுவும் இம்மி கூட அண்டாது! அவன் ஒரு விமலன்!
உக்கமும் தட்டொளியும் தந்து = நோன்புக்கு வேண்டிய விசிறி-கண்ணாடி, இரண்டையும் கொடு!
உன் மணாளனை = அதோடு உன் மணாளனையும் கொடு!
* ஆலயங்களில் பெருமாளுக்கு விசிறி விடுவது திருவாலவட்டம் = திரு+ஆல+வட்டம்! திருக்கச்சி நம்பிகள் என்னும் தாழ்ந்த குலத்தவர்! அவருக்கு இந்தக் கைங்கர்யத்தில் மிகுந்த ஈடுபாடு! இவரே இராமானுசரின் முதல் குரு!
* அதே போல் பெருமாளுக்கு ஷோடச உபசாரம் முடிந்த பின்னர், கண்ணாடி காட்டுவது வழக்கம்! தட்டொளி சேவை-ன்னு பெயர்!
* அடியவர்களுக்கும் கண்ணாடி தேவை! நெற்றியில் திருமண்காப்பு என்னும் நாமம் தரித்துக் கொள்ள! அதுக்குன்னே ஒரு பேழை இருக்கும்! அதில் கண்ணாடியும் இருக்கும்!
* கூடவே விசிறியும் தேவை! வியர்வையில் நாமம் காயும் வரை, கலையாதிருக்க, விசிறிக் கொள்வார்கள்!
இப்படி, பெருமாளுக்கும் உக்கம்-தட்டொளி தேவை! அடியார்களுக்கும் உக்கம்-தட்டொளி தேவை!
அதை உன் மணாளனிடம் கொடுத்தனுப்பு தாயே! அதையும் வாங்கிக் கொள்கிறோம், மணாளனையும் வாங்கிக் கொள்கிறோம்!
அவனையும் தரணும், அவனை அடையும் வழியை-யும், நீ தானேம்மா எங்களுக்குத் தரணும்? அவனையும் தா! உக்கம்-தட்டொளியும் தா!
தமிழ்க் குலமகள், நப்பின்னைப் பிராட்டியார் திருவடிகளே சரணம்!
செவ் வாய் = சிவந்த இதழ்,
சிறு மருங்குல் = குறுக்கு சிறுத்தவளே!
நப்பின்னை, நங்காய், திருவே = நீளா, பூ, ஸ்ரீ - தேவிகளின் உருவே!
கண்ணனுக்கு முதன் முதலில் வாய்த்த நப்பின்னையை, தமிழ்க்குடி மகளை, முதலில் சொல்கிறாள் பாருங்கள் கோதை!
பெருமாள் ஏகபத்னி விரதன் தான்! 🙂 = "ஸ்ரீ"-மன்-நாராயணன்!
பலருக்கும் ஸ்ரீதேவி (லக்ஷ்மி-திருமகள்), பூ-தேவி (பூமிதேவி-மண்மகள்) தெரியும்! நீளா தேவியைச் சிலர் அறிந்திருப்பார்கள்!
முல்லை நிலத்தின் தமிழ்த் தலைமகள், தமிழ்க் கடவுள் மாயோனின் குடும்ப விளக்கு, ஆயர் குலத்து ஆய் மகள் = நப்பின்னையைத் தான் நீளா தேவி என்று குறித்தார்கள் என்று சொல்வாரும் உண்டு!
ஆனால் இவர்கள் எல்லாம் ஒரே உருவம், உருவகம் தான்! அதான் "ஸ்ரீ" = மகாலஷ்மி!
* அலைமகள் + மண்மகள் + ஆய்மகள் = "ஸ்ரீ"
* லக்ஷ்மி + பூமிதேவி + நீளாதேவி = "ஸ்ரீ"
* அறம் + பொருள் + இன்பம் = வீடு!
* அலைமகள் + மண்மகள் + ஆய்மகள் = "ஸ்ரீ"-மன்-நாராயணன்!
* அதான் கோதை, இந்தப் பாட்டில், அவள்-அவன் என்று இருவரையும் எழுப்பி விடுகிறாள்!
* நப்பின்னை, நங்காய், திருவே, விமலா என்று நால்வரையும் ஒரு சேர எழுப்பி விடுகிறாள்!
* இவர்கள் இத்தனை பேருக்கும் மூலமான = "ஓம் நமோ நாராயணாய" என்னும் கலியே(ஒலியே), திருநாமமே, துயில் எழாய்! துயில் எழாய்!
அந்தத் திருமந்திரப் பொருளால், நலம் தரும் சொல்-நாராயணா என்னும் நாமத்தால்...
ஒருவர் விடாது, எங்கள் எல்லாரையும் நீராட்டு!
இப்போதே எம்மை நீராட்டு! ஏல்-ஓர் எம் பாவாய்! ஏல்-ஓர் எம் பாவாய்!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!
#திருப்பாவை
#கோதைமொழி
No comments:
Post a Comment