Monday, January 6, 2020

* தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் #பி_எச்_பாண்டியன்_மறைவு - #சில_நினைவுகள்*



————————————————
கடந்த 1970களில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி. ராமசாமி மூலமாகத்தான் திரு பி எச் பாண்டியனின் பழக்கம் ஏற்பட்டது. அதன்பின் அடிக்கடி நீதிபதி ராமசாமி அவர்களின் அடையாறு வீட்டிற்கு செல்லும் பொழுது அங்கு 
பி எச் பாண்டியனும் இருப்பார். அப்போதிலிருந்து நட்பு தொடங்கியது.

பேரவைத் துணைத் தலைவராக இருந்தபோது உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் நடத்த வருவார். அவர் பேரவைத்தலைவர் ஆனவுடன் அவர் தன்னுடைய வழக்குகளை தன்னுடைய ஜூனியரான மறைந்த ராஜகுழந்தை
யிடமும் என்னிடமும்  கொடுத்து வழக்குகளை கவனிக்கச் சொன்னார்.  பழ.நெடுமாறன் உடன் அரசியல் பணி ஆற்றி கொண்டிருந்த காலகட்டத்தில், ஒருமுறை பி எச் பாண்டியன் அவர்கள் விடுதலைப் புலிகள்   தலைவர் பிரபாகரனை சந்திக்க வேண்டும் என்று விரும்பியபோது அவரை அவருடைய இல்லத்திற்கு அழைத்துச் சென்றேன். உடன் பேபி சுப்பிரமணியமும் வந்தார். 

அன்றைய முதலமைச்சர் எம்ஜிஆரை சந்திக்க நான் ஒருமுறை ராமாபுரம் தோட்டத்திற்கு சென்று  இருந்த பொழுது அங்கிருந்த, பி எச் பாண்டியன் என்னை கண்டவுடன் "தம்பியும் எங்க நெல்லை மாவட்டம் தான்" என்று அவரிடம் சொல்லவும் செய்தார். 

கடந்த 1983ல் தேசிய நதிநீர் இணைப்பு குறித்து நான் பொது நல வழக்கு தொடர்ந்த பொழுது காலஞ்சென்ற காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகர சுவாமிகள். பி.எச். பாண்டியனையும் என்னையும் சந்திக்க விரும்புவதாக செய்தி வந்தவுடன் நாங்கள் இருவருமே எதற்கு என்ன விஷயமாக இருக்கும் என்று யோசித்தோம். ஒரு மடத்தின் பீடாதிபதி சந்திப்பதற்காக  நம்மை அழைத்தமையால் காஞ்சிபுரம் நோக்கி பயணம் செய்ய தயாரானபோது பேபி சுப்பிரமணியமும்  எங்களுடன் இணைந்துகொண்டார். காஞ்சிபுரம் சென்று சந்திரசேகர சுவாமிகள் சந்தித்தபொழுது    அவருடன் ஜெயந்திருயும் இருந்தார்.

வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசு குருசாமி நாயக்கர்  வழக்கில்( WP no 6262/1984) உச்சநீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்த பின்னரும், ஜனாதிபதி அவருடைய கருணை மனுவை நிராகரித்த பின்னரும் வைகோ உறுதி  அளித்ததற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவருக்காக போராடி அவரை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றியது இந்திய நீதிமன்ற வரலாற்றிலேயே முதல் வழக்காகும். பின் பிறிதொரு காலத்தில் இதேபோன்று  மாகாளி  நாடார் வழக்கிலும் நான் நடத்திய குருசாமி நாயக்கரின் வழக்கின் தீர்ப்பினை எடுத்துக்காட்டி பி.எச். பாண்டியன் மாகாளி நாடாரை தூக்குதண்டனை
யிலிருந்து  காப்பாற்றினார். 

என்னுடைய திருமணத்திற்கு தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையேற்றதால் திரு பி எச் பாண்டியன் அவர்களால் வர இயலவில்லை. திருமணம் முடிந்த அன்று மாலையே என்னுடைய மனைவியின் வீட்டிற்கு  தன் மனைவி சிந்தியா பாண்டியனுடன் வந்து என்னை சந்தித்து வாழ்த்திவிட்டு சென்றார்.

நெல்லை மாவட்டத்தில் திமுக அரசியலில் வைகோ, தினகரன் கே.பி. கந்தசாமி, அதிமுக அரசியலில் பி. எச். பாண்டியன், ஜி. ஆர்.எட்மன்ட், கருப்பசாமி பாண்டியன், காங்கிரஸ் என்று எடுத்துக் கொண்டால் செல்லப்பாண்டியன் கே.டி கோசல்ராம் என அரசியல் களம் அங்கே இருந்தது. அவர் நெல்லையின் மீதும் தாமிரபரணி ஆற்றின் மீதும் சேரன்மாதேவி மீதும் மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார்.  
அதே சேரன்மாதேவி வட்டாரத்தைச் சேர்ந்த நீதிபதி  ரத்தினவேல் பாண்டியனுக்கும்  திரு பி எச் பாண்டியனுக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இந்தப் பிரச்சனையினால் இருவருக்குமே தேவையில்லாத மன வருத்தம் தான் என்பதை அவர்கள் இருவருக்குமே புரிய வைத்தேன். திரு ரத்னவேல் பாண்டியன் அவரிடம் சென்று நான் ”இவ்வாறாக இருப்பது சரி இல்லை” என்றதும் அவர் அங்கிருந்து உடனடியாக தொலைபேசியில் திரு பி.எச் பாண்டியனை தொடர்புகொண்டு ”என்ன பாண்டியன்?” என்றவுடன் அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த மனத்தாங்கல் விலகி சுமூகமானது. பிறகு திரு பி எச் பாண்டியனை நான் சந்தித்தபோது அவர் என்னிடம் மிகுந்த மகிழ்ச்சியுடன் இப்பத்தான் நிஜமாகவே மனசுக்கு நிம்மதியா இருக்கு. தேவையில்லாத பிரச்சினை விலகிப் போன மாதிரி இருக்கு என்று கூறினார். 

சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி சிங்காரவேலு ஒரு சேட்டினுடைய கிரிமினல் வழக்கில் அளித்த தீர்ப்பை தமிழக சட்டமன்றத்தின் அதிகாரத்தை கொண்டு நிறுத்தி வைக்கின்றேன், அந்த தீர்ப்பு செல்லாது என்று சொன்னார். இது எப்படி  என்றால்    அன்றைய உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த என்னுடைய சீனியர்  ஆர் காந்தி அவர்களிடம் இந்த வழக்கு எப்படி நடந்தது என்பது குறித்து  கடிதம் ஒன்றை வாங்கி நிறுத்தி வைக்க, அதற்கு மறுநாள் அது பெரிய விவாதங்களை உண்டாக்கியது. அப்போது பேரவையின் முன்னவர் நாவலரும்,  பேராசிரியரும் எம்ஜிஆரிடம்பேசிஉயர்நீதிமன்றத்
திற்கும் சட்டமன்றத்திற்கும் ஏற்பட்டுள்ள சிக்கலை தீர்த்து வைக்க வேண்டும் என்று சொன்னார்கள். சீனியர் காந்தி என்னை  அழைத்து  தான் பி.எச்.பாண்டியனுக்கு கொடுத்த கடிதம் அன்றைக்கு வழக்கறிஞராக இருந்து பிற்காலத்தில் நீதிபதியாக இருந்த சந்துரு போன்றவர்கள் விமர்சனம் செய்து வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தை கூட்டி விட்டார்கள். நீங்கள் சென்றால் தான் பாண்டியன் அந்த கடிதத்தை கொடுப்பார். அதை வாங்கி வாருங்கள் என்று என்னை அனுப்பினார். காந்தி.நான் திரு பாண்டியனை சந்தித்து நிலைமையை சொன்னதும் “தம்பி! நீ வந்திருக்க அதனால நான்  இந்த கடிதத்தை திருப்பி  கொடுக்கிறேன்” என்று சொல்லி அந்த கடிதத்தை கொடுத்தார். எண்பதுகளில் நடந்த இந்த சம்பவம் எல்லாம் இப்பொழுதும் நினைவில் நிழலாடுகிறது.  மறுநாள் நாவலரும் பேராசிரியரும் சட்டப்
பேரவையில் பேசி அந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டனர்.

அப்போது ஒன்றுபட்ட நெல்லை மாவட்டம் தூத்துக்குடி திமுக நகரமன்ற தலைவராக என் பெரியசாமி இருந்தார். அப்போது சட்ட மன்ற மனுக்கள் குழு தூத்துக்குடிக்கு  வந்த போது பொதுமக்கள் சிலர்  பெரியசாமி கடன் கொடுத்து வட்டி அதிகமாக எங்களிடம் கேட்கிறார் என்று புகார் கொடுத்ததை ஒட்டி நான் கடுமையாக நடவடிக்கை எடுக்கப் போகின்றேன் என்றும் இதை வைகோவிடம் சொல்லிவிடு என்றும் பி.எச். பாண்டியன்   என்னிடம் சொன்னார். அதற்கு நான் எதுக்கு இந்த தேவையில்லாத  வேலை  என்று கேட்டதற்கு அரசியல்ல இதெல்லாம் வேற விஷயம் என்றார். இந்த விபரத்தை வைகோவிடம் தெரிவித்துவிட்டு நானே பி.எச். பாண்டியனிடம் நேரடியாக சண்டைப் போட்ட பிறகு தன்னுடைய கருத்தை  மாற்றிக்  கொண்டார்.

ஒருமுறை கோவில்பட்டியில் நடக்கும் ஹாக்கி போட்டியை பார்க்க வேண்டும் என்று பி எச். பாண்டியன் ஆசைப்பட நான் அவரை அழைத்துச் சென்றேன்.

கடந்த 1980களில் திமுக  சட்டமன்ற உறுப்பினர்கள் அரசியல் சாசனத்தை எரித்து தம்முடைய எதிர்ப்பினை பதிவு செய்யும் போராட்டத்தினை கலந்து கொண்ட திமுக சட்ட மன்ற உறுப்பினர்களின் பதவி பறிக்கப்பட்டது என சட்ட மன்றத்தில் அறிவித்தார்.நான், பி எச் பாண்டியன் அவர்களிடம் இது சரியானமுடிவல்ல;அமைப்புமீறக்கூடாது. இன்றைக்கு  செய்கின்ற  தவறு எதிர்காலத்தில் பெரிய பாதிப்பு உள்ளாகும் என்று நான் சொன்ன போது அவர்  அதை ஏற்றுக் கொள்ளாமல் என்னிடம் அப்போது கடுமையாக  பேசினார். எம்ஜிஆர் மறைவிற்குப்பின் ஒரு முறை 1987ல் நானும் அவரும்  மதுரைக்கு ரயிலில் பயணம் செய்து
கொண்டிருந்தபோது ”ஆமாம் தம்பி நீ அன்னைக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்களை நான் நீக்கியிருக்க கூடாது என்று சொன்னது சரிதான், அன்னைக்கு பண்ணி இருக்க கூடாது என்று வெளிப்படையாக ஒத்துக் கொண்டார்.

வானளாவிய அதிகாரம் என்று பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. ஆனந்த விகடன்ஆசிரியர்பாலசுப்பிரமணியத்தை சிறைக்கு அனுப்பியதும் வணிக ஒற்றுமை பால்ராஜை சிறைக்கு அனுப்பியது எல்லாம் அன்றைக்கு கடுமையான எதிர்வினைகள் இவர்மீது இருந்தன. தராசு ஷ்யாமிற்கும் இவருக்கும் பிரச்சினைகளும் இருந்தன. அரசினர் தோட்டத்தில் இருந்த திமுக சட்டமன்ற அலுவலகத்தை பூட்டியதை எதிர்த்து இவர் மீது கடுமையான போராட்டங்கள் நடந்தன.

எம்ஜிஆர் இறந்தவுடன் தமிழக முதலமைச்சராக இருந்த அவருடைய துணைவியார் ஜானகி அம்மையார் பொறுப்பேற்றார்.  காங்கிரஸ் கட்சி முதலில் ஜானகி அணியை ஆதரிப்பதாக சொல்லி பின்னர் ஆதரவை வாபஸ் பெற்றது, அன்றைக்கு சட்டமன்றத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. பின்பு ஆட்சி கவிழும் நிலையில் அன்றைக்கு சட்ட அமைச்சராக இருந்த திரு பொன்னையன் ஒரு குறிப்பினை எழுதி இருப்பதை அறிந்து அந்த குறிப்பில் மேலும் சில சட்ட திருத்தங்களோடு எழுதப்பட வேண்டும் என்று என்னை உடனே அழைத்தார். நானும் என்னுடைய சக வழக்கறிஞர் பி சந்திரசேகரும் இணைந்து சென்று அந்த சட்டத்திட்டங்களை தட்டெழுத்து செய்த மனுவுடன் அன்றைக்கு ஆளுநராக இருந்த குரானாவை சந்திக்க  ராஜ் பவனிற்கு பி எச் பாண்டியன் என்னை உடன் அழைத்துச் சென்றார். அப்போது சட்டமன்ற  கலைப்பு குறித்தான  வழக்கு  விபரங்களை எல்லாம் கவர்னரிடம் எடுத்துச் சொல்ல சொன்னார். 

அப்போது அதிமுகவில் ஒரு பகுதியினர், காங்கிரஸ் ஆட்சிக்கு திட்டமிட்டனர். இதற்கு டெல்லியும் உடந்தை. இந்த திட்டத்தை சபாநாயகரான பி.எச்.பாண்டியனிடம் சொல்லி ஆதரவு கேட்டுள்ளனர். அவர் எதுவும் பேசாமல் அவர்களை அனுப்பி வைத்துவிட்டு, அடுத்த நாள் காங்கிரஸை ஆதரிக்க தயாராக இருந்த எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்தார். அப்போது நான் மட்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு ஒப்புக் கொண்டிருந்தால், திராவிட கட்சிகளின் ஆதிக்கம்  தமிழகத்தில்  குறைந்து போயிருக்கும் என அடிக்கடி சொல்வார்.

திமுக சார்பில் நான் 1989ல் சட்ட மன்ற தேர்தலில்  கோவில்பட்டியில் போட்டியிட்டபோது அவர் சார்பில் சேரன்மாதேவியில் போட்டியிட்டார். என் மீது கொண்ட அன்பினால் அவர் கோவில்பட்டி வந்து அவருடைய நண்பர்கள் வேண்டியவர்களை எல்லாம் அழைத்து எனக்கு வாக்களிக்கச் சொல்லி ஒரு நாள் முழுவதும் எனக்காக வாக்கு சேகரித்தார். தலைவர் எம்ஜிஆர் இப்போது உயிருடன் இல்லை ஆகவே அனைவரும்  உதயசூரியனுக்கு எனக்கு வாக்களியுங்கள் என்று கூறினார். 

அவருக்கு வழக்கு மன்றத்தில் நான் உதவியாக இருந்தேனே  தவிர அரசியல்ரீதியாக அவருக்கு பெரிதாக உதவியது இல்லை. 

வளைகுடாப் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் நாங்கள் இருவரும் டெல்லியில் இருந்தோம். விமான சேவையும் மிகவும் குறைந்த அளவிலேயே இருந்தது. எனக்கு சென்னைக்கு செல்வதற்கான டிக்கெட் கிடைத்து விட்டது. ஆனால் திரு பாண்டியன் அவர்களுக்கு டிக்கெட் கிடைக்காததால் அவர் மிகவும் வேடிக்கையாக "என்னை இந்த பிளைட்ல ஏத்துனா தான் உன்னை விடுவேன்" என்று  என்னை மறித்தார். உடனே நான் விமான நிலையத்தி
லிருந்து அன்று தரைவழி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த கே.பி. உண்ணிகிருஷ்ண்னை  தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துச் சொல்லி பி எச் பாண்டியனை என்னுடன் பயணிக்க அனுமதித்த உடன் "நான் ஒரு ஸ்பீக்கர் ஆக இருந்திருக்கேன். ஆனா அதையெல்லாம் தாண்டி ஒரு போன் பண்ணி என்ன ஃப்ளைட் ஏத்திட்ட தம்பி. உனக்கொரு தனித் திறமை எப்பவுமே இருக்கு" என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.  இதுபோன்ற பல சுவையான சம்பவங்கள் எங்கள் இருவர் இடையில் நடந்துள்ளது.

நான் திமுகவில் இணைந்த பிறகு அவருடனான தொடர்பு எளிதாக இல்லை. ஏதேனும் விமான பயணத்தின் போது அல்லது ரயில் பயணத்தின்போது சந்தித்துக் கொண்டால்தான் உண்டு.
பின்னர் நான் எழுதிய  நிமிர வைக்கும் நெல்லை புத்தகத்தை வெளியிட்ட போது அந்த புத்தகத்தை படித்து விட்டு நன்றாக இருக்கிறது நான் இந்த புத்தகத்தை எழுதி இருக்கணும்ன் ஆசைப்பட்டேன். 

அவர் வேப்பேரியில் குடியிருந்தார்.
பின் அண்ணா நகர் சொந்தமாக வீடு கட்டி அதற்கு பொருநை என்று பெயரிட்டு என்னிடம் இது சரிதானா என்று கேட்டார்.  அதற்கு நானும் அருமையானபெயர் வையுங்கள் என்றேன்.

கோவில்பட்டி ஆனந்த விலாஸ் ராமகிருஷ்ண ராஜா எனக்கும் திரு பி எச் பாண்டியன் அவர்களுக்கும் ஒரு பாலமாக இருந்தவர். பிற்காலத்தில் அமைச்சரான திரு நடேசன் பால்ராஜ்  அன்றைய ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் எங்களுக்கு வேண்டிய பணிகளை செய்தும் தருவார்.
இதெல்லாம் அவருடன் நான் நெருக்கமாக இருந்த காலகட்டத்தின் நினைவுகள்.

இவருக்கு உதவியாளராக இருந்த வெங்கட்ராமன், மசூத் அதே போல் பெருமாள் சீனிவாசன், மாசாண முத்து என்பவரெல்லாம் இன்றைக்கும் நினைவுக்கு வருகின்றனர்.

பொதுவாக எல்லோரும் அவரை எதிர்மறையாகவே சிந்திப்பார்கள். ஆனால் உண்மையில் மிகவும் நல்ல உள்ளம்  படைத்த  மனிதர். 
இன்றைக்கு தினத்தந்தி செய்தி தலைமையாசிரியராக இருக்கும் சுகுமாருடன் நானும் அடிக்கடி தமிழக சட்டமன்றத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் சந்தித்து உரையாடுவது உண்டு. மதிய உணவு கூட அங்கேயே வந்து விடும். இதெல்லாம் பசுமையான நினைவுகள்.
அதுபோல தன்னுடைய சொந்த ஊரான கோவிந்தப்பேரி வீட்டிலுள்ள  தன் தோட்டத்தில் விவசாயத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார். அன்றைய காலகட்டங்களில் கருப்பு-வெள்ளை டிவிக்கு தனி மவுசு. தன்னுடைய தொகுதிக்குட்பட்ட முக்கிய ஊர்களுக்கு தொலைக்காட்சி வாங்கித் தரவேண்டும் என்பது அவருடைய ஆசையாக இருந்தது. பழைய தொலைக்காட்சி பெட்டியாக இருந்தாலும் பரவாயில்லை வாங்கி கொடுக்க வேண்டும் என்று அதை செய்தார்.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்காடி தமிழ்நாடு தொகுப்புக்கு அதிக அரிசி பெற்று கொடுத்தார்....1989-91 ல் கலைஞர் ஆதரவு என சட்டசபையில் செயல்பட்டார்.....சட்ட அமைச்சராகாதது ஒரு இழப்பு....சட்டசபை கலைப்புக்கு பிறகும் 1988 ஆகஸ்ட் 15 ல் கொடி ஏற்றினார்

நேற்றைக்கு இரவு நானும் அவருக்கு நெருக்கமாக இருந்த நண்பர் கல்கி பிரியனும் சென்று மலர் வளையம் வைத்து  இறுதி  மரியாதை செலுத்தினோம். இந்த துக்கமான நிலையிலும் அவருடைய மகன்கள் மனோஜ் பாண்டியனும் அரவிந்த் பாண்டியனும் “அண்ணே அப்ப எல்லாம் நாங்க  பள்ளியில்  படித்துக் கொண்டிருக்கும் சிறுவர்கள். நீங்களும் அப்பாவும்  ரொம்ப  நேரம் பேசிட்டிருப்பீங்க என மேலே குறிப்பிட்ட சில நிகழ்வுகளை நினைவு படித்தி தங்கள் தந்தை மறைந்த துக்கத்தையும் மறந்து அசை போட்டது அவர்களுக்கு ஒரு ஆறுதலாக இருந்திருக்கலாம். 

ஆனால்எனக்கோ,49ஆண்டுகள்அரசியல் காலத்தில் பி. எச். பாண்டியன் உனக்கான வாய்ப்பு அரசியலில் வரவில்லையே, யார்  யாருக்கோ கிடைக்கிறதே என்பார். நான் அவரிடம் அதற்கு பதிலாக சொல்வேன் அரசியல் மன மாச்சரியங்களை கடந்து உங்கள் தலைவர் எம்ஜிஆர்,  கம்யூனிஸ்ட் தலைவர் பி. ராமமூர்த்தி, கலைஞர், காமராஜர்,எம்.கல்யாணசுந்தரம் மற்றும் சோ.அழகர்சாமி(சிபிஐ)
அ. அமிர்தலிங்கம்(இலங்கை) பிரபாகரன், நாராயணசாமி நாயுடு போன்ற பல ஆளுமைகளோடு தொடர்பிருந்து நற்பெயரைப் பெற்றுள்ளேன். எம். எல். ஏ., எம்.பி ஆவது மட்டுமே அரசியல் கிடையாது. அரசியல் களத்தில் மனமாச்சரியங்கள் கடந்து நட்பும் தோழமையும் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. அது எனக்கு கிட்டியுள்ள வரமாகும். சிலருக்கு இந்த அருமையெல்லாம் தெரிவதற்கு வாய்ப்பில்லை. என்றதும்,உன்னிடம் எதுவும் பேச முடியாது விடுய்யா என்பார். 

அவர்வீட்டில் இரவு சில நேரம் இருந்து விட்டு  கனத்த   இதயத்தோடு
திரும்பினேன். பி.எச். பாண்டியனின் கணீர் குரலை இனி கேட்க முடியாது.
————————————————-
திருநெல்வேலி மாவட்டம்  சேரன்மகாதேவியில் இருந்து 1977, 1980, 1984 ஆண்டுகளில் அதிமுக சார்பில் சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1980ஆம் ஆண்டு முதல் 1985ஆம் ஆண்டு வரை சட்டப் பேரவை துணை தலைவராகவும், பிப்ரவரி 27, 1985 முதல் பிப்ரவரி 5, 1989 வரை  சட்டப்  பேரவையின் தலைவராகவும் பதவி வகித்தார். 1999ஆம் ஆண்டில் திருநெல்வேலி தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
05.01.2020
#ksrposts
#ksradhakrishnanposts
#பி_எச்_பாண்டியன்
#நினைவுகள்

(படம்-கடந்த 1981 உச்ச நீதி மன்றத்தில் நடந்த வழக்கு விசயமாக டில்லி சென்ற போது...... தமிழ் நாடு இல்லத்தில் )

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...