Saturday, January 4, 2020

திருப்பாவை #கோதைமொழி 19.மார்கழி-

#திருப்பாவை
#கோதைமொழி 19.மார்கழி-  

“ *தத்துவம் அன்று* ! *தகவு* !”

குத்து விளக்கெரிய, கோட்டுக் கால் கட்டில் மேல்,
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்,
கொத்து அலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்,
வைத்துக் கிடந்த மலர் மார்பா, வாய் திறவாய்!

மைத் தடம் கண்ணினாய்! நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்?
எத்தனை ஏலும் பிரிவு ஆற்றகு இல்லாயால்?
தத்துவம் அன்று! தகவு! ஏல்-ஓர் எம் பாவாய்!

குத்து விளக்கெரிய = குத்து விளக்கு மங்கலச் சின்னம்! அறை முழுதும் வெளிச்சம் கொடுக்க வெவ்வேறு உயரங்களில் வரும்! அந்தக் காலத்தில் படுக்கை அறையிலும் நெடிய குத்து விளக்கு உண்டு!
இரவில் தூங்கும் போது, முழுக்க முழுக்க எல்லா விளக்குகளையும் அணைத்து விடும் பழக்கம் நமக்கு இருந்ததில்லை! ஒரு சிறு தீபம் மெல்லிதாக எரிந்து கொண்டு தான் இருக்கும்! இன்னிக்கி அதை Night Lamp, 0-Watts Bulb என்று மேல்நாட்டுத் தனமாய்ச் சொல்லி விடுகிறோம்! 🙂

குத்து விளக்குக்கு ஐந்து முகங்கள்!
சிவபிரானுக்கும் ஐந்து வெளிப்படையான முகங்கள் உண்டு! குத்து விளக்கில் ஒரு முகத்தில் நெய் ஊற்றினாலும், அது தானாய் வழிந்து, அடுத்தடுத்த முகங்களுக்கும் சென்று சேர்க்கும்! அதே போல் நாமும் ஒரு குத்து விளக்கு தான்! 
எப்போதோ ஒரு முறை இறைவனைச் சேவித்து விட்டு வந்தாலும், அந்த நெய்யானது அடுத்தடுத்த முகங்களுக்குத் தானாகவே ஓடணும்!
ஆலயம் அடிக்கடி செல்லாத மற்ற நேரத்திலும், அகம் என்னும் குத்து விளக்கில், கருணை ஜோதி தானே தெரியணும்! அதுவே குத்து விளக்கின் மங்கல மகத்துவம்! அருட்பெருஞ் சோதி! தனிப்பெரும் கருணை!

கோட்டுக் கால் கட்டில் மேல் = யானைக் கோடுகளால் (தந்தங்கள்) ஆன உறுதியான கால்கள்! 
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி = மெத்து மெத்துன்னு இருக்கும் பஞ்ச சயனக் கட்டில் அது! பஞ்ச+சயனம் என்பதை பஞ்சுகள் அடைத்த சயனம்-ன்னும் கொள்ளலாம்

மைத் தடம் கண்ணினாய் = நப்பின்னை, மைக்கண்ணீ!
தடம் கண்ணினாய் = பெருமாளை அடையத் தடம் காட்டும் கண்ணினாய், வழி காட்டும் கண்ணினாய்!

நீ உன் மணாளனை, எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்? = உன் புருஷனை, தூக்கத்தில் இருந்து எழவே விட மாட்டே போலிருக்கே!

எத்தனை ஏலும், பிரிவு ஆற்றகு இல்லாயால்? = எங்களை நீ எத்தனை ஏற்றுக் கொண்டாலும், அவன் பிரிவினையும் ஆற்ற மாட்டேங்குறியோ?

அகலகில்லேன் இறையும் என்று இமைப் பொழுதும் கூட அவனை அகல மாட்டாய்! அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா! 

தத்துவம் அன்று! = இது உனக்குத் தத்துவமே அன்று!
நீ புருஷகார பூதை அல்லவா! உன்னைப் பற்றித் தான் அவனைப் பற்றணும்! அப்படி தான் எங்கள் ஆச்சார்யர்கள் எங்களுக்குக் சொல்லிக் கொடுத்துள்ளனர்! 
ஸ்ரீ-மன்-நாராயண சரணெள, சரணம் ப்ரபத்யே!
ஸ்ரீ-மதே-நாரயணாய நமஹ!

ஸ்ரீ-யால்-கூடிய நாராயணன் திருவடிகளில் சரணம் அடைகின்றேன்!
ஸ்ரீ-யுடன்-நாராயணனே! எனதில்லை(ந+ம), எல்லாம் உனதே!
இது தான் தத்துவம்! இதை நாங்களும் பற்றுகிறோம்! நீயும் பற்று!

த்வயம் (துவயம்) என்பது உன் தத்துவம் அல்லவா? இரட்டைத் தத்துவம் என்ற பெயர் ஆச்சே அதற்கு! மந்திர ரத்தினம் என்பார்களே அதை!
ஆண்/பெண், சாதி/மதம், மொழி/இனம், குளித்தோ/குளிக்காமலோ...ஒரு துளி பேதம் கூட கிடையாதே அதுக்கு! யார் வேண்டுமானாலும், எப்போ வேண்டுமானாலும் மேற்சொன்ன துவய (இரட்டை) மந்திரத்தைச் சொல்லலாமே?

அதில் "ஸ்ரீ" சப்தத்தால் உன்னைத் தானே முதலில் துதிக்கின்றோம்?
* அவன் தலை மாட்டில் நீ இருந்தால், உன் மடியில் சுகமாகத் தூங்குவானே! ஆனால் அதையும் வேண்டாம் என்று, அவன் திருவடிக்கு அருகில் நீ அமர்ந்திருப்பது எதனால்?
* அந்தத் திருவடிகளை எங்களுக்குக் காட்டிக் கொடுக்கத் தானே?
தாயே! தத்துவத்தை நீயே மீறாதே! அவனை விடு! அவன் எழட்டும்!
 

தகவு = இந்த துவய மந்திரமே உனக்குத் தகவு! தகுதி!
தக்கார், தகவு-இலர் என்று எங்கள் தமிழ்க்குடி ஐயன் வள்ளுவனும் சொல்லி இருக்காரே!
உயர்ந்தவர்க்கு எல்லாம் தகவு-ன்னு ஒன்னு இருக்கே! அந்தத் தகவுக்கே தகவு அல்லவா இந்த துவயம்! தாயே, அதை நீ மறந்து விடாதே!

துவயம் என்னும் தகவினை ஏல்-ஓர் எம் பாவாய்! ஏல்-ஓர் எம் பாவாய்!
ஸ்ரீ-மன்-நாராயண சரணெள, சரணம் ப்ரபத்யே!
ஸ்ரீ-மதே-நாரயணாய நமஹ!

ஆண்டாள் திருவடிகளே சரணம்!

#திருப்பாவை
#கோதைமொழி

(Pic- actress asha sarath presented in east side of padmanabha swamy temple..Photo: Vivek kovalam)


No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...